பலகார சீக்ரெட்ஸ்
உளுந்துவடை மொறுமொறுப்பாக வேண்டுமா?
மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வடை செய்தால் வடை மொறுமொறுப்பாக வரும்.
உளுந்துவடை செய்யும் பொழுது, மாவு மிகவும் நீர்த்து விட்டால், மாவுடன் கொஞ்சம் அவல் கலந்து வடை தட்டவும். வடை மிருதுவாக வரும்.
பருப்புவடை, பக்கோடா மொறுமொறுவென்று வர, மாவுடன் ரவை கலந்து செய்ய வேண்டும்.
வடை மாவுக்கு அரைக்கும் பொழுது தண்ணீரை ஒரேடியாக ஊற்றாமல் சிறிது சிறிதாக தெளித்து அரைக்கவேண்டும். மாவு நீர்த்துப் போகாது. வடையும் பதமாக வரும்.
கடையில் வாங்கிய பஜ்ஜி மாவில் சிறிதளவு கடலைமாவு மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை அள்ளும்.
பஜ்ஜி செய்யும்முன் உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்தரிக்காய் வில்லைகளை உப்பு மிளகாய் போடி கலந்த கலவையில் சிறிது நேரம் ஊறவைக்கவும். அதன்பிறகு பஜ்ஜி செய்து பாருங்கள்! அட்டகாசமாக இருக்கும்.
கடலை மாவு இரண்டு பங்கு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சமையல் சோடா சேர்க்காமலே பஜ்ஜி உப்பி வரும்.
பஜ்ஜி போட காய்கறி இல்லாத சமயத்தில, தோலுடன் கூடிய வறுத்த வேர்க்கடலையை சேர்த்து பஜ்ஜி செய்யலாம். இதன் சுவை அனைவருக்கும் பிடிக்கும்.
பஜ்ஜி மாவில் சிறிது தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி செய்தால் புதிய கலர், புதிய சுவை கேரன்டி!
போண்டா மாவுக்கு சுவை சேர்க்க சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்தால் போதும்.
ஸ்னாக்ஸ் செய்யும்பொழுது மொறுமொறுப்பாக வர சிறிதளவு கான்பிளவர் மாவு சேர்த்தால் போதும். மொறுமொறுப்பு கிடைக்கும்.
பலகாரங்கள் நமத்துப் போகாமல் இருக்க, உப்பை ஒரு காட்டன் துணியில் கட்டி பலகாரம் உள்ள பாத்திரத்தின் அடியில் வைக்கவும். சீக்கிரத்தில் நமது போகாது.
பலகாரம் செய்யும் போது ஒரு கரண்டி சூடான எண்ணெய் அல்லது வெண்ணை கலந்து மாவு பிசையவும். பலகாரம் செய்யும் பொழுது அதிக எண்ணெய் குடிக்காது. பலகாரமும் கரகரப்பாக வரும்.
கேசரி, பால்கோவா போன்ற இனிப்புகளை செய்யும் பொழுது நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் இருக்கும்
பால் பாயசம் செய்யும் பொழுது சிறிது அளவு அரைத்த பாதாம் சேர்த்து கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக