ஜூலை 22, 2020

சாம்பார்,குழம்பு,ரசம் சீக்ரெட்ஸ்

சாம்பார்,குழம்பு,ரசம் சீக்ரெட்ஸ் 

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது காய்கறிகளையும் சேர்த்து வேக வைக்கவும். சாம்பாரின் சுவை கூடும். அரிசி அலசிய இரண்டாவது தண்ணீரில் பருப்பை வேக வைத்துப் பாருங்கள். சாம்பாரின் சுவை அலாதியாக இருக்கும். துவரம் பருப்பை மிக்ஸியில் நற நற பதத்தில்  பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும் பொழுது ஈஸியாக வேகும். சாம்பார் செய்து முடித்த பின், அதில் வறுத்து பொடி செய்த தனியாபொடியை சிறிதளவு தூவி இறக்கினால், வாசனை கும்மென்று இருக்கும். சாம்பாரில் உப்பு அதிகமானால், பாதியாக நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு குறையும். அல்லது ஒருபிடி சாதத்தை உருண்டையாக உருட்டி சாம்பாரில் போட்டாலும் உப்பு குறையும்.

குறிப்பு:

சாம்பார், ரசம், குழம்பு, குருமா, கிரேவி உட்பட எதில் உப்பு அதிகமானாலும் இதே முறையை பயன்படுத்தலாம். 


சாம்பாரில்  காரம் அதிகமானால் 4 தேங்காய் துண்டுகளை அரைத்து சாம்பாருடன்  சேர்த்து கொதிக்க வைக்கவும். காரம் குறையும். தேங்காய் துண்டுகளுக்கு பதில் நல்லெண்ணெய் ஊற்றி சாம்பாரை கொதிக்க வைத்தாலும் காரம் குறையும் . 


சாம்பாரில் புளிப்பு அதிகமானால் சிறிது அளவு வெல்லம் அல்லது சர்க்கரையைச் சேருங்கள். புளிப்பு குறையும். 


சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், கொஞ்சம் கடலை மாவு, அதில் பாதி அளவுக்கு அரிசிமாவு இரண்டையும் கரைத்து சாம்பாருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். சாம்பார் கெட்டியாக வரும்.

காரக்குழம்பு நல்ல மணமாக இருக்க,   தாளிக்கும் பொழுது கொஞ்சம் வெந்தயம் போட்டு தாளிக்கவும். வாசனை தூக்கும். 


மோர்க்குழம்பு செய்யும் பொழுது, சிறிதளவு ஓமத்தை பொடி செய்து குழம்பில் சேர்த்தால், மோர் குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். 

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். 

தாளிக்கும் எண்ணெயில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய்கறிகளை வதக்கினால் நல்ல நிறத்தில் இருக்கும். 


வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். 

பூண்டு, வெங்காயம் இரண்டையும் வதக்கி சமைக்க வேண்டி வந்தால், முதலில் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளுங்கள். காரணம் வெங்காயத்தை விட பூண்டு விரைவில் வதங்கி விடும். 

தனியா (வரக்கொத்தமல்லி) 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன் தனி தனியாக வறுத்து ஆற வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை புளிக்குழம்பு செய்யும் பொழுது சேர்த்துக் கொள்ளவும்.தனித்துவமான சுவைக்கு உத்திரவாதம் ! 

புளி காய்ச்சலுக்கு தாளிக்கும் பொழுது பெருங்காயத்தை சேர்த்து தாளிக்க வேண்டும். அதேபோல புளிக்காய்ச்சல் செய்து இறக்கிய பிறகு வறுத்து பொடி செய்த வெந்தயத்தை  தூவவும். நல்ல வாசனையாக இருக்கும்.

கிரேவியில் காரம் அதிகமானால் ஒரு தக்காளி, ஒரு வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கி கொதிக்க வைக்கவும்!  காரம் குறையும் சுவை கூடும்

தக்காளி வதக்கிய பிறகு நீர் சேர்த்து தளதளவென்று கொதிக்க வைத்தால் கிரேவி கெட்டியாக வரும். சிகப்பாக கிரேவி வர, வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். 

தேங்காய் உடைத்த தண்ணீரை ரசத்தில் சேர்த்துப் பாருங்கள்! ரசத்தின் சுவை அசத்தலாக இருக்கும்!! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...